அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்தியா வருகிறார்

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோர் வருகிற 21ம் திகதி இந்தியா வருகிறார்கள். அவர்கள் 24ம் திகதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார்கள்.
ஜே.டி.வான்ஸ் தனது மனைவியும் அமெரிக்கா வின் 2-வது பெண்மணியுமான உஷா மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வருகிறார். உஷா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.
ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்துடன் சிம்லா, ஐதராபாத், ஜெய்ப்பூர், டெல்லிக்கு சுற்றுலா செல்ல உள்ளார். அவர் தனிப்பட்ட பயணமாக இந்தியாவுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜே.டி.வான்ஸ்க்கு பிரதமர் மோடி விருந்து அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தார். அதன்பின் வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார்.
வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் டிரம்புக்கு அடுத்தபடியாக மிகவும் சக்தி வாய்ந்த நபராக உள்ள ஜே.டி.வான்சின் இந்திய பயணம் முக்கியத்துவம் பெற்று உள்ளது.
ஜே.டி.வான்ஸ் தனிப்பட்ட பயணமாக இந்தியா வந்தாலும் வரி விதிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸ் உயா் தொழில்நுட்பம், முக்கிய கனிமங்கள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆகியவற்றில், இந்தியா-அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வரவுள்ளாா்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக வருகிற 22ம் திகதி சவூதி அரேபியா செல்லும் முன், அவரை வான்ஸ் மற்றும் வால்ட்ஸ் சந்திப்பார்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.