பெண்ணாக நடித்து 17 பிக்குகளை ஏமாற்றிப் பணம் பறித்த இளைஞர்

பெண்ணாக நடித்து 17 பிக்குகளை ஏமாற்றி நிதி மோசடி செய்த இளைஞர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள இணைய புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளது.
17 பௌத்த பிக்குகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து தலாவ பகுதியை சேர்ந்த இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலபே தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவரான இவர் பிக்குகள் அதிகமாக பயன்படுத்தும் முகநூல் ஒன்றில் அறிமுகமாகி பின் போலி முக நூல் ஒன்றின் ஊடாக முதலில் பிக்குகளுடன் குறுந்தகவல்களை அனுப்பியுள்ளார்.
அதன் பின் பெண் குரலில் வீடியோ அழைப்பில் பேசி ஆபாச படங்களை காட்டி அவர்களை தூண்டி அவர்களின் செயல்பாடுகளை வீடியோ செய்து அவற்றை சமூகமயப் படுத்துவதாக பயமுறுத்தி பணம் பெற்று வந்துள்ளார்.
பதிவு செய்யப்பட்ட காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி, சந்தேக நபர் பிக்குகளை மிரட்டி, அவர்களிடம் பணம் கேட்டுள்ளதாகவும், பணம் கொடுக்க மறுக்கும் பிக்குகளின் காணொளிகளை சந்தேக நபர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சில பிக்குகள் சந்தேக நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முறைப்பாடுகள் தொடர்பாக மெட்டா நிறுவனம் மூலம் குறிப்பிட்ட நபர் பற்றி தகவல்களைப் பெற்று நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் துறையின் இணைய விசாரணைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.