கனடாவில் இலங்கை பெண் சுட்டுக்கொலை – இருவர் கைது

கனடாவில் கடந்த மாதம் இலங்கை தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் ஏழாம் திகதி காலை 6:30 மணியளவில் மார்க்கம் நகரின் சோலஸ் வீதியிலுள்ள வீட்டிற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
குறித்த வீட்டில் 20 வயது நிலக்ஷி ரகுதாஸ் மற்றும் 26 வயது ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், அந்த வீட்டில் ஒரு நாய் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலக்ஷி ரகுதாஸ் உயிரிழந்தார்.
இந்நிலையில், சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொலிஸார், துப்பாக்கிச் சூடு இலக்கு வைக்கப்பட்ட ஒன்று என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த புதன்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 28 வயதான ஏக்வோன் முர்ரே மற்றும் 35 வயதான ஹெஷ்மத் ரசூலி-கலந்தர்சேட் ஆகியோர் டொராண்டோவில் கைது செய்யப்பட்டதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக முதல் நிலை கொலை, கொலை முயற்சி, விலங்குகளைக் கொல்வது அல்லது காயப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவலில் உள்ளனர் என்றும், இந்த மாத இறுதியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலக்ஷி ரகுதாஸ் தனது பெற்றோர் மற்றும் இரண்டு சகோதரர்களுடன் வசித்து வந்த சோலஸ் வீதியில் அமைந்துள்ள வீடு, 2018 முதல் குறைந்தது ஐந்து முறை குறிவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக தன்னை குமார் என்று மட்டுமே அடையாளம் கண்டுகொண்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர், அந்த ஐந்து சம்பவங்களில் மூன்று சம்பவங்கள் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் நடந்ததாக கூறினார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.