படலந்த ஆணைக்குழு அறிக்கை – லால்காந்தவிடம் முதலாவது வாக்குமூலத்தை பெற வேண்டும்

படலந்த ஆணைக்குழு அறிக்கை – லால்காந்தவிடம் முதலாவது வாக்குமூலத்தை பெற வேண்டும்

படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால் விவசாய அமைச்சர் கே.டீ லால்காந்தவிடம் முதலாவது வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

1987/89 தீவிரவாத தாக்குதல் காலத்தில் ஜேவிபிக்கு எதிராக நிலைப்பாட்டை எடுத்த மற்றும் ஜேவிபிக்கு எதிராக சாட்சியமளித்த பிக்குகள், கிராம அதிகாரிகள் மற்றும் பலர் கொல்லப்பட்டதாக லால் காந்த கடந்த தேர்தலுக்கு முன்பு பகிரங்கமாகக் கூறியதாக பொதுச் செயலாளர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட அமைச்சரின் அறிக்கையை பலர் பார்த்ததாகவும், அந்த காணொளி தன்னிடம் இருப்பதாகவும் அதுகோரள சுட்டிக்காட்டினார்.

அதன்படி, 1987/89 தீவிரவாத காலகட்டம் தொடர்பான விசாரணைகளில் லால் காந்தவின் பெயர் முதல் சாட்சியாக சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த தீவிரவாத காலகட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிதான் அதிகம் பாதிக்கப்பட்டதாகக் கூறிய பொதுச் செயலாளர், அந்தக் காலகட்டத்தில் கொல்லப்பட்ட அனைத்து மக்கள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பயங்கரவாதத் தாக்குதல்களின் போது உயிரிழந்த சுமார் 2,000 ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் உட்பட கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் எந்தவொரு விசாரணையையும் எதிர்கொள்ளவும், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் எந்த தண்டனையையும் அனுபவிக்கவும் தயாராக இருப்பதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

Share This