தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் சரணடைந்தார்

நீதிமன்றத்தால் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.
மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள “W15” ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பெரவரி 28ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது.
அதைத் தொடர்ந்து, இந்தக் கைது நடவடிக்கையைத் தடுக்கக் கோரி, தேசபந்து தென்னகோன் மார்ச் (10) அன்று தனது சட்டத்தரணிகள் மூலம் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைச் சமர்ப்பித்தார்.
அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், அத்துருகிரியவின் ஹோகந்தர பகுதியில் உள்ள தேசபந்து தென்னகோனுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் ஒரு வீட்டை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று (18) பிற்பகல் சோதனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.