மீண்டும் அரசியலில் பிரவேசிக்க தீர்மானித்துள்ள லொஹான் ரத்வத்தே

மீண்டும் அரசியலில் பிரவேசிக்க தீர்மானித்துள்ள லொஹான் ரத்வத்தே

கண்டி மக்கள் சார்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து மீண்டும் அரசியலில் பிரவேசிக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தே தெரிவித்தார்.

நேற்று (11) மஹய்யாவ பிரதேசத்தில் அவருடைய வீட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை எனவும், பல துரதிஷ்டவசமான சம்பவங்கள் காரணமாக சுமார் மூன்று மாதங்களாக தனது கட்சி அலுவலகம் மூடப்பட வேண்டியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் தீர்மானமொன்றை மேற்கொண்டு பொறுப்பு வழங்கப்பட்டால் அதனை ஏற்க தான் தயாராக உள்ளதாகவும், திசைக்காட்டி அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும் அவை நிறைவேற்றப்படுவதாக தெரியவில்லை எனவும் அவர் கூறினார்.

மக்களுக்காக கண்டி மாவட்டத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கவும் தயாராக இருப்பதாக கூறிய அவர், கண்டிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இலங்கையின் தலைமைப் பொறுப்பை வழங்கினால் அதனையும் ஏற்க தயாராக இருப்பதாகவும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அனுருத்த ரத்வத்தேவின் அரசியல் பயணத்தின் மூலம் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வதே தனது நம்பிக்கை என்றும், அதிகாரத்தைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டவில்லை என்றும், கண்டி மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் தான் அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

அதற்காக மீண்டும் அரசியலுக்கு வர நடவடிக்கை எடுப்பேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தே தெரிவித்தார்.

Share This