தொடர்ச்சியாக நாணய சுழற்சியில் தோல்வியடைந்து ரோகித் சர்மா சாதனை

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியான அதிக முறை நாணய சுழற்சியில் தோல்வியடைந்த அணித் தலைவர் என்ற சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.
துபாயில் நேற்று (09) நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா நாணய சுழற்சியில் தோல்வியடைந்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவரது தொடர்ச்சியான 12வது தோல்வியாகும்.
அதன்படி, ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் நாணய சுழற்சியில் தோல்வியடைந்த ரோகித் சர்மா, இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் பிரையன் லாராவின் சாதனையை சமன் செய்தார்.
2023 நவம்பர் முதல் நேற்று துபாயில் நியூசிலாந்திற்கு எதிரான ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி வரையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நாணய சுழற்சியில் தோல்வியடைந்துள்ளது.
2023 ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதி போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றிபெற்ற பின்னர் இந்திய அணி இதுவரை விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் நாணய சுழற்சியில் தோல்வியடைந்துள்ளது.
இதுவரையில் தொடர்ச்சியாக 15 போட்டிகளில் நாணய சுழற்சியில் தோல்வியடைந்துள்ள இந்திய அணி, தொடர்ச்சியாக நாணயச் சுழற்சியில் தோற்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
இந்தப் பட்டியலில் நெதர்லாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. 2011 மற்றும் 2013 க்கு இடையில் அந்த அணி நாணயச் சுழற்சியில் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.