தேர்தல் நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி

தேர்தல் நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்து, வேட்புமனு பட்டியலை தயார் செய்யும் நடவடிக்கைகள் விரைவாக நிறைவு செய்யப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப் பணம் செலுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு மூலம் திகதி அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தனது கட்சியால் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல்களின் முதல் சுற்று நடத்தி நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் இறுதி சுற்றை நடத்தி வேட்பாளர்களை தெரிவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், தேர்தலுக்கு கட்சி சார்பில் இளம் வேட்பாளர்களை களமிறக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக முன்னர் கட்டுப்பணம் செலுத்தி, இன்னும் வைப்புத்தொகையைத் திரும்பப் பெறாத குழுக்களுக்கு, அவற்றைப் பெறுவதற்கான வாய்ப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

இதுவரையில், 93 மில்லியன் ரூபாய் கட்டுப்பணம் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

Share This