பொலிவியாவில் பேருந்து விபத்து – 37 பேர் பலி

பொலிவியாவில் பேருந்து விபத்து – 37 பேர் பலி

தென்மேற்கு பொலிவியாவில் நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டதுடன், 39 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

உயுனி மற்றும் கோல்சானி இடையேயான சாலையில் அதிகாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது, மேலும் முதற்கட்ட விசாரணையில், அதிக வேகம் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய பேருந்துகளில் ஒன்று லத்தீன் அமெரிக்காவின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான ஒருரோ கொண்டாட்டத்திற்குச் சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தில் இருந்து தப்பிய இரண்டு ஓட்டுநர்களில் ஒருவர் மது அருந்தியிருப்பதை பயணிகள் பார்த்ததாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பொலிவியாவில் இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்து பதிவாகின்றன, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1,400 பேர் விபத்தில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போடோசி பகுதி மலைப்பிரதேசமாக இருப்பதாலும், சாலை பராமரிப்பு முறையாக மேற்கொள்ளப்படாததாலும் இவ்வாறான விபத்துகள் பதிவாகுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share This