பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் இருப்பு தீர்ந்துவிட்டதாக மக்கள் விசனம்

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் இருப்பு தீர்ந்துவிட்டதாகவும், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்று (28) பிற்பகல் முதல் எழுந்துள்ள அதிக தேவையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்திய புதிய கட்டணச் சூத்திரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எரிபொருள் விநியோகஸ்தர்கள் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளனர்.
இந்த சூழ்நிலை காரணமாக, நேற்று (28) பிற்பகல் முதல் வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன.
இதேவேளை, பெரும்பாலான மக்கள் அதிகபட்ச அளவு எரிபொருளைப் பெற்று வருகின்றனர்.
இந்த சூழ்நிலையின் விளைவாக ஏற்பட்ட அதிக தேவை காரணமாக, பல பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து போயுள்ளது.
இருப்பினும், பிற நிறுவனங்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழக்கம் போல் எரிபொருளை விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.