காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திலிருந்து அதானி குழுமம் விலகியதற்கு காரணம் என்ன – அரசாங்கம் விளக்கம்

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இரத்து செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என தெரிவித்த அமைச்சர்
நலிந்த ஜயதிஸ்ஸ குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது குறித்த உடன்பாடொன்றை எட்டத் தவறியதால் நிறுவனம் திட்டத்திலிருந்து விலகியதாக கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“உள்ளூர் நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலமாகவோ மக்கள் நியாயமான விலையில் மின்சாரத்தைப் பெறுவதை உறுதி செய்வதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
அதானியை விட குறைந்த விலையில் மின்சாரம் வழங்க மற்றொரு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக சில விமர்சகர்கள் கூறுகின்றனர்.
முதலீட்டாளர் ஒருவர் வெளியேறினாலும், அதிகமான முதலீட்டாளர்கள் நியாயமான விலையில் முதலீடு செய்ய வாய்ப்புகள் உள்ளன” என்றார்.