உள்ளூராட்சி மன்ற தேர்தல் – உயர்நீதிமன்ற தீர்ப்பை நாடாளுமன்றிற்கு அறிவித்த சபாநாயகர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்த சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அதனை நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்பை சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றில் இன்று (14.02) அறிவித்தார்.
அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டு மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட குழாமினால் விசாரிக்கப்பட்ட ‘உள்ளுர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்)’ எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராளுமன்றத்திற்கு அறிவிப்பதாக சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.
சட்டமூலம் முழுமையாகவும் மற்றும் குறிப்பாக 2 மற்றும் 3 ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 12 (1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுவதால், அரசியலமைப்பின் 84 (2) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும்” என நீதிபதிகள் குழாத்தின் பெரும்பான்மையினராகிய நீதிபதிகள் இருவர் அறிவித்ததாக சபாநாயகர் தெரிவித்தார்.
சட்டமூலம் முழுமையாகவும் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்புடன் முரண்படுவதில்லை என்பதால் அதனைப் நாடாளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மை ஒன்றின் மூலம் நிறைவேற்றப்பட முடியும் என நீதிபதிகள் குழாத்தின் மீதமுள்ள நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு இன்றைய கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமென சபாநாயகர் கட்டளையிட்டார்.