கடந்த காலங்களில் மீளப்பெறப்பட்ட 102 வழக்குகளில் 65 வழக்குகள் மீள தாக்கல்

கடந்த காலங்களில் மீளப்பெறப்பட்ட 102 வழக்குகளில் 65 வழக்குகள் மீள தாக்கல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபரினால் கடந்த காலங்களில் மீளப்பெறப்பட்ட 102 வழக்குகளில் 65 வழக்குகள் மீள தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதற்கிணங்க எத்தகைய பாரபட்சமும் இன்றி சாட்சிகளின் அடிப்படையிலேயே இந்த வழக்குகள் மீள தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும் பிரதமர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (09) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் எதிர்க்கட்சி எம்பி அஜித் பி பெரேரா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அஜித் பி பெரேரா எம்.பி தமது கேள்வியின் போது, 2019 ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டுவரை இலஞ்ச,ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மீளப்பெறப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை? மேற்படி வழக்குகளில் மீண்டும் மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை யாது என்றும் வினவினார்.

அதற்கு தொடர்ந்தும் பதிலளித்த அமைச்சர்,

”இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினாலும் சட்டமா அதிபரினாலும் மீளப்பெறப்பட்ட வழக்குகளை மீண்டும் மீளாய்வு செய்து அதற்கமைவாக வழக்குகளை மீள தாக்கல் செய்வதாக எமது வளமான நாடு அழகான வாழ்க்கை கொள்கைப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், 2019 ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டுவரை மீளப்பெறப்பட்ட 102 வழக்குகள் மீளாய்வு செய்யப்பப்டடு, 65 வழக்குகளை மீள தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் 34 வழக்குகளை மீள தாக்கல் செய்யாமலிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 வழக்குகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றன” என்றும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அஜித் பி பெரேரா தனது மேலதிக கேள்வியின்போது,
”கடந்த காலங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த, பாரியளவில் பேசப்பட்டுவந்த பல வழக்குகள் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அல்லது சட்டமா அதிபரினால் தொழிநுற்ப கோளாறு என்ற அடிப்படையில் மீளப்பெறப்பட்டிருந்தன. தற்போது அவ்வாறு மீளப்பெறப்பட்ட வழக்குகளில் 65 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் பாரதூரமான நீதி மோசடியுடன் தொடர்பான வழக்குகள் எதுவும் மீள தாக்கல் செய்யப்படவில்லை. அவ்வாறான வழக்குகளை மீள தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேட்கிறேன்” என்றார்.

அதற்கு பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
”102 வழக்குகளில் 65 வழக்குகளை மீள தாக்கல் செய்துள்ளதுடன் இன்னும் 3 வழக்குகள் தொடடர்பில் ஆராய்ந்து வருகிறோம். இதனால் நாங்கள் யாரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெளிவாகும். இந்த சபையில் இருக்கும் மற்றும் முன்னர் இருந்த பலருக்கு எதிராக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மாறாக பாரபட்சம் பார்த்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை” என்றார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் குறுக்கிட்ட அஜித் பி பெரேரா எம்.பி.
”பாரபட்சமின்றி செயற்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். ஆனால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, அவர் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு தினங்களில், அவருக்கிருந்த ஜனாதிபதி சிறப்புரிமை அடிப்படையில் மீளப்பெறப்பட்டது, தற்போது அவருக்கு அந்த சிறப்புரிமை இல்லை. அதனால் அந்த வழக்கை மீள தாக்கல் செய்ய முடியும்.

அதேபோன்று முன்னாள் மத்தியவங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த கிரேக்க பிணைமுறி தொடர்பான வழக்கு உங்களது காலத்தில் மீளப்பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தவறை ஏற்றுக்கொள்வதுமில்லை.என அவர் தெரிவித்துள்ளார். வழக்கு மீள பெறப்பட்டது. அதனால் மீள வழக்கு தாக்கல் செய்யும்போதும் தெரிவுசெய்யப்பட்டே வழக்குகள் தாக்கல் செய்யும் நடவடிக்கை இடம்பெறுகிறது” என்றார்.

அதற்கு பதிலளித்த பிரதமர்,
”நாம் எவரையும் பாதுகாப்பதாக இருந்தால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணையை முன்னெடுத்துச் செல்ல மாட்டோம்.
எவரையும் பாதுகாக்க எமது அரசாங்கம் கட்டுப்பட்டில்லை. அதற்கான அவசியமும் கிடையாது.

முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு நாம் முறையாக நடவடிக்கை எடுக்கும்போது, யாரைப் பாதுகாக்க செயற்படுகிறீர்கள் என்ன எம்மைப் பார்த்து கேட்பது பெரும் விந்தையாகும். அதனால் நாம் யாரையும் பாதுகாக்கப்போவதில்லை” என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )