செம்மணியில் 40 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 34 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று வியாழக்கிழமை சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு மனித எலும்பு கூட்டு தொகுதிகளுடன் நான்கு மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் எட்டாம் நாள் பணிகள் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
மனித புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளை முற்றாக அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், இரு சிறுவர்களுடையது என சந்தேகிக்கப்படும் எலும்பு கூட்டு தொகுதிகளுடன் நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் இதுவரை காலமுமான அகழ்வு பணிகளில் நேற்றைய தினம் வியாழக்கிழமையுடன் 40 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் ஆய்வுக்காக சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை புதைகுழிகளில் இருந்து எடுக்கப்பட்ட புத்தக பை, காப்பு, காலணி என்பவை சான்று பொருட்களாக குறிக்கப்பட்டு, நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை செய்மதி படங்கள் ஊடாக மேலும் புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் . பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களின் பங்களிப்புடன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆடையை ஒத்த துணி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதனை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்படாததால் அது எந்த வகையான துணி என குறிப்பிட முடியாது என தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை செம்மணி புதைகுழியில் தற்போது அகழ்வு பணிகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகிறது.
சான்று பொருட்களை அடையாளம் காணுதல், எலும்பு கூடுகளை ஆராய்வது போன்ற செயற்பாடுகள் எதிர்வரும் காலங்களில் தான் முன்னெடுக்கப்படும் அதன் பின்னரே தகவல்களை கூற முடியும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மன்றில் முன்னியாகும் சட்டத்தரணி தெரிவித்தார்