குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வாய்வுக்கு 2.8 மில்லியன் மதிப்பீடு!

குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வாய்வுக்கு 2.8 மில்லியன் மதிப்பீடு!

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் மனித புதைகுழியென நம்பப்படும்  பிரதேசத்தில் அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான நிதி மதிப்பீட்டை கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இதன்படி, 2.8 மில்லியன் ரூபாய் கோரிக்கையை நிதி அமைச்சு மற்றும் நீதி அமைச்சிற்கு அனுப்புவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் 150க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மனிதப் புதைகுழியை அகழ்வாய்வு செய்ய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது.

குறித்த படுகொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த படுகொலை தொடர்பான வழக்கு நேற்று களுவாஞ்சிக்குடி நீதவான் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அகழ்வாய்வுப் பணிகளுக்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி மதிப்பீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அதை மேல் நீதிமன்றம் மூலம் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சடடத்தரணி முசாம் முபாரக் இதனை தெரிவித்துள்ளார்.

“இன்று கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரியினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பாதீடு குறித்து இன்று அவதானம் செலுத்தப்பட்டது.

இதற்கமைய 2.85 மில்லியன் ரூபாய் பாதீட்டின் பட்ஜட் பிரேக்டவுன் (budget breakdown) இன்று நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், இந்த பாதீட்டு நிதியினை பெற்றுக்கொள்ளும் வகையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தின் ஊடாக நிதி அமைச்சுக்கும், நீதி அமைச்சுக்கும் அனுப்புமாறு கட்டளையிட்டுள்ளார்.”

இந்த வழக்கு ஒக்டோபர் ஒன்பதாம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This