செம்மணியில் 19 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு – அகழ்வு பணிகள் நேற்றுடன் நிறுத்தம்

செம்மணியில் 19 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு – அகழ்வு பணிகள் நேற்றுடன் நிறுத்தம்

யாழ்ப்பாணம் சித்துபாத்தி இந்து மயானத்தில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 19 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அகழ்வு பணிகள் நேற்றைய தினம் சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றுள்ளது.

இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 26ஆம் திகதி அளவில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன.

அதனை அடுத்து, அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது. இரு நாட்கள் அகழ்வு பணிகள் நடைபெற்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

பின்னர் மீண்டும் கடந்த 02ஆம் திகதி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு , நேற்றைய தினம் சனிக்கிழமை வரையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் 19 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை குறித்த பகுதியினை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறும் மேலும் அகழ்வு பணிகளை முன்னெடுக்க அனுமதி வேண்டும் என சட்டத்தரணிகள் கடந்த வாரம் யாழ் .நீதவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க 45 நாட்கள் வழங்கிய மன்று, அப்பகுதியினை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This