வெல்லவ பிரதேசத்தில் மூன்று வாரங்களில் 15 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு
குருநாகல் வெல்லவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் (24) மாலை இளம் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இந்த சம்பவம் தொடர்பிலான முதற்கட்ட விசாரணைகளில் சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெல்லவ பிரதேசத்தில் கடந்த மூன்று வாரங்களில் இடம்பெற்ற 15ஆவது துப்பாக்கிச் சூட்டு சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
இவ்வாண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெல்லவ பிரதேசத்தில் நேற்று முன்தினம் (24) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இளம் வர்த்தகர் 32 வயதுடையவர் ஆவார்.
அவருடைய மனைவிக்கு 30 வயது நிரம்பியுள்ள நிலையில் உயிரிழந்த நபர் இரு பிள்ளைகளின் தந்தையுமாவார்.
அவர்கள் வெல்லவ வீட்டுத் தொகுதியின் வீடு ஒன்றில் வாடகைக்கு வசித்த வந்துள்ளனர்.
வீடு நான்கு புறமும் சுவர்களால் சூழப்பட்டுள்ளதுடன், இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ள வாடகைக் கொலையாளி, பக்கத்து வீட்டு நிலத்தில் உள்ள மாமரத்தில் ஏறி கொலை இலக்கை மேற்கொண்டிருப்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு T56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மிகவும் அனுபவம் வாய்ந்த துப்பாக்கி கையாளுபவர் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் சுட்ட ஐந்து தோட்டாக்களில் நான்கு கொலை செய்யப்பட்ட இளம் தொழிலதிபரை தாக்கியுள்ளதுடன் மீதமுள்ள ஒன்று அவரது மனைவியைத் தாக்கியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளம் வர்த்தகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பிலான தீவிர விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.