இந்திய மீனவர்கள் 14 பேர் விடுதலை

இந்திய மீனவர்கள் 14 பேர் விடுதலை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியப் பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து குறித்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கைது மற்றும் நீண்டகால பிரச்சினைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். இந்த விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் தொடர வேண்டும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

மீனவர்களை விடுவிப்பது மற்றும் அவர்களின் படகுகளை திருப்பி அனுப்புவது குறித்தும் நாங்கள் வலியுறுத்தினோம்.” என்று இந்தியப் பிரதம் தெரிவித்திருந்தார்.

இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து வருகிறது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து 119 இந்திய மீனவர்களும் 16 மீன்பிடி படகுகளும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி,

இலங்கை அதிகாரிகள் விரைவில் 11 மீனவர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும், வரும் நாட்களில் மேலும் பலரை விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினை இரு தரப்பினருக்கும் இடையில் கணிசமாக விரிவாக விவாதிக்கப்பட்ட ஒரு விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் இறுதியில் இரு தரப்பினரின் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதால், தேவையான ஒத்துழைப்புக்கு மனிதாபிமான மற்றும் பயனுள்ள அணுகுமுறையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக அவர் மேலும் கூறினார்.

Share This