11 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடையவை

இவ்வாண்டின் இது வரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 11 சம்பவங்கள் பாதாள உலக நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்றும், 6 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக நடந்தவை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இன்று (25) காலை பொலிஸ் ஊடகப் பிரிவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்படி, மேற்கூறிய சம்பவங்கள் தொடர்பாக நேற்று (24) நிலவரப்படி 49 துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த ஆண்டில் மட்டும், சமூகத்தில் சட்டவிரோதமாக புழக்கத்தில் இருந்த 5 T-56 ஆயுதங்கள் மற்றும் 6 கைத்துப்பாக்கிகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.