100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை…இ.பி.எஸ் கண்டனம்
தி.மு.க அரசு 100 நாள் வேலைத்திட்டத்தில் தொழில் புரியும் மக்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என அ.தி.மு.க பொதுச் செயலாளர் இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபை தேர்தலுக்கு முன்பு இந்த 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றும் சம்பளம் 300 ரூபாவாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் வாக்குறுதியளித்தனர்.
ஆனால், இதுவரை எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் ஏழைகள். இவர்கள் இந்தச் சம்பளத்தை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றனர்.
நிலைமை இவ்வாறிருக்க, தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான சம்பளம் இன்றுவரை வழங்கப்படவில்லை.
இதனால் இந்த மக்களால் இந்த வருட தைப் பொங்கலைக் கூட கொண்டாட முடியாத சூழ்நிலையை தி.மு.க அரசு ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி ஜனவரியில் பல மாவட்டங்களில் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் தொழில் வழங்கப்படவில்லை என்றும் பல செய்திகள் வருகின்றன.
எனவே 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுபவல்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்குமாறும் மீண்டும் அவர்களுக்கு தொழில் வழங்குமாறும் தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்” என கூறப்பட்டுள்ளது.