
புதிய சாதனை படைத்தார் பும்ரா
மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற முதல் இருபதுக்கு இருபது போட்டியில் டெவால்ட் ப்ரூயிஸூன் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
மேலும், இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் ஐந்தாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பும்ரா படைத்துள்ளார்.
இலங்கை அணியின் லசித் மலிங்க, நியூசிலாந்து அணியின் டிம் சவுத்தி, பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹசன் மற்றும் பாகிஸ்தான் அணியின் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைபற்றியுள்ளனர்.
இவர்களுடன் ஜஸ்பிரித் பும்ராவும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.
பும்ரா இதுவரை 52 டெஸ்ட் போட்டிகளில் 99 இன்னிங்ஸ்களில் 234 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல், 89 ஒருநாள் போட்டிகளில் 88 இன்னிங்ஸ்களில் 149 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இருவரை 81 சர்வதேச டி20 போட்டிகளில் 101 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களில் பும்ரா இரண்டாவது இடத்தில் உள்ளார்.
107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அர்ஷ்தீப் சிங் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
