துறைமுக முனைய அபிவிருத்தி திட்டத்துக்கான நிதியுதவி கோரிக்கையை மீளப் பெற்றது அதானி குழுமம்

துறைமுக முனைய அபிவிருத்தி திட்டத்துக்கான நிதியுதவி கோரிக்கையை மீளப் பெற்றது அதானி குழுமம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்துக்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் முன்வைத்த நிதியுதவிக்கான கோரிக்கையை இந்தியாவின் அதானி குழுமம் மீளப் பெற்றுள்ளது.

அதானி குழுமத்தின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்திற்கு, அந்த குழுமத்தின் கோரிக்கைக்கு அமைய 553 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதாக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.

இந்தநிலையில், குறித்த கோரிக்கையை அதானி குழுமம் மீளப் பெற்றுள்ளது. அதற்கமைய, கொழும்பு மேற்கு முனையத் திட்டத்துக்காக உள் நிதி திரட்டல்கள் மூலம் நிதியளிப்பதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கொழும்பு துறைமுக மேற்கு முனையத் திட்டம் சிறப்பாக முன்னேறி வருவதாகவும், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய பில்லியனர் கௌதம் அதானியின் கட்டுப்பாட்டில் உள்ள அதானி குழுமம், துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தில் 51% பங்குகளை வைத்துள்ளது, இது சீனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் கோ லிமிடெட் மூலம் நடத்தப்படும் முனையத்தையும் கொண்டுள்ளது.

இலங்கையின் கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், முனையத்தின் 34 வீத உரிமையைக் கொண்டுள்ளது, மீதமுள்ளவை அரசாங்கத்தால் நடத்தப்படும் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமானது.

Share This