சமூக வலைத்தளங்களில் பரவும் பொலிஸாரின் காணொளி – கடுமையான நடவடிக்கை மேற்கொண்டுள்ள பொலிஸ் மா அதிபர்
பாணந்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் கடமையின் போது குடிபோதையில் உறங்குவதாக சமூக ஊடகங்களில் காணொளியொன்று பரவி வருகிறது.
குறித்த காணொளி தொடர்பாக தற்போது பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவும் காணொளி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் பிரகாரம் குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாணந்துறையில் உள்ள வீடொன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் மதுபோதையில் உறங்கிக் கொண்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய அதிகாரி வேறு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காணொளியின் படி, பொலிஸ் ஜீப்பில் இருந்து வரும் பொலிஸ் அதிகாரிகள் குழு, குடிபோதையில் மற்றும் சீருடையில் படுக்கையில் தூங்கும் ஒரு பொலிஸ் அதிகாரியை ஏற்றிச் செல்வதைக் காணலாம்.
சமயலறையில் பொலிஸ் சீருடையை அதிகாரிகள் அவமதித்தமை தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதன்படி, பாணந்துறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவின் பேரில், போதைப்பொருளுக்கு அடிமையான பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய அதிகாரி வேறு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.