
உழைப்பை உயிராகக் கொண்ட தமிழ் சமூகத்தின் அடையாளத் திருநாளே ‘தை பொங்கல்’
உழைப்பை உயிராகக் கொண்ட தமிழ் சமூகத்தின் அடையாளத் திருநாளான தைப்பொங்கலை கொண்டாடும் இந்த இனிய தருணத்தில், என் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகளை தமிழ் மக்களனைவருக்கும் அன்புடனும் பொறுப்புணர்வுடனும் தெரிவித்துக் கொள்கிறேன் என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தைப்பொங்கல் என்பது வெறும் விழா அல்ல. அது உழைப்புக்கான மரியாதை, இயற்கைக்கான நன்றி, ஒடுக்குமுறைகளை எதிர்த்து நிற்கும் மக்களின் உறுதி, மற்றும் எதிர்காலத்தை நோக்கிய நம்பிக்கையின் அரசியல் பிரகடனம் ஆகும்.
பல தசாப்தங்களாக போராலும் புறக்கணிப்பாலும் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் வாழ்வில், நிலையான முன்னேற்றம், பொருளாதார சுயநிலைத்தன்மை மற்றும் சமூக நீதி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது அரசின் தெளிவான நிலைப்பாடாகும்.
இதன் ஓர் அங்கமாக – எனது அமைச்சின் விடயதானத்துக்குட்பட்ட யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நவீன மீன்பிடி தொழில்நுட்ப வசதிகள், மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் தரையிறக்க மையங்களின் மேம்பாடு, குளிரூட்டல் மற்றும் சேமிப்பு வசதிகள், மீன்வளப் பயிற்சி மையங்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான தொழில்வாய்ப்பு உருவாக்கத் திட்டங்கள் ஆகியவை திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வடக்கு மக்களின் பொருளாதார மீட்பு வெறும் உதவித் திட்டங்களால் அல்ல, உரிமைகளுடன் கூடிய வளர்ச்சி மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்பதில் எமது அரசு உறுதியாக உள்ளது. மீனவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் மரியாதை எப்போதும் அரசின் முன்னுரிமையாக இருக்கும்.
இந்த தைப்பொங்கல் திருநாள், புறக்கணிப்பின் காலத்தை முடிவுக்கு கொண்டு வந்து, வடக்கு மக்களின் வாழ்வில் புதிய விடியல் மலரச் செய்யும் திருப்புமுனையாக அமைய வேண்டும். ஒற்றுமை, உழைப்பு மற்றும் சமூக நீதி ஆகியவை நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கான அடித்தளமாக மாற வேண்டும்.
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.
இந்த பொங்கல், உங்கள் இல்லங்களில் வளமும் நம்பிக்கையும் மட்டுமல்ல, உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு நியாயமான எதிர்காலத்தையும் கொண்டு வரட்டும்.
