
வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராக யாழில் போராட்டம்
வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் போராட்டமொன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், இனவாதம் மற்றும் பிரதேச, சாதிய வாதங்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்,
நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பிலுள்ள அரசியல் பிரதிநிதிகள், சமீபத்தில் பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து எங்களது ஆழ்ந்த கவலையையும் கடுமையான கண்டனத்தையும் வலியுறுத்துகிறோம்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் மனித மரியாதைக்கு எதிரான சொற்கள் பயன்படுத்தப்படுவது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இத்தகைய வெறுப்பு தூண்டும் பேச்சுக்கள் சமூகங்களுக்கிடையேயான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் இன அடிப்படையிலான பிளவுகளை தீவிரப்படுத்துகின்றன.
இது நாட்டின் அமைதிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நேரடி அச்சுறுத்தலாகும்.
மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் பிரச்சினைகளை பொறுப்புடன், நாகரிகத்துடன் முன்வைத்து தீர்வுகளை உருவாக்க வேண்டியவர்கள்.
ஆனால், அதற்கு பதிலாக வெறுப்பு, இழிவு மற்றும் பிரிவினை உணர்வுகளை தூண்டும் கருத்துக்களை வெளியிடுவது அரசியல் பொறுப்பின்மையின் வெளிப்பாடாகும்.
இத்தகைய செயல்கள் ஜனநாயக மரபுகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் நேரடி அவமதிப்பாகும்.
மேலும், அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தும் போதெல்லாம் ஆதிக்க சிந்தனைகளை பிரதிபலிக்கும் வகையிலான மொழியையும் அணுகுமுறையையும் முற்றாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
மக்கள் மத்தியில் சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர புரிதலை வளர்க்கும் உரைகள் மட்டுமே அரசியல் உரையாடலின் அடிப்படையாக அமைய வேண்டும்.
இவ்வாறான பொறுப்பின்மை கொண்ட பேச்சுக்கள் தொடர்ந்தால், சமூகத்தில் இனவாதம், பிரதேசவாதம் மற்றும் பகைமை மனப்பான்மை ஆழப்படுத்தப்படும் அபாயம் உள்ளது.
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு மட்டுமல்லாமல், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்கள் மனஅழுத்தத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகின்றனர்.
எனவே, அனைத்து அரசியல் தலைமைகளும் உடனடியாக தங்களது பொது உரைகளில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். இன, பிரதேச மொழி அடிப்படையிலான இழிவுபடுத்தல், அவதூறு மற்றும் வெறுப்பு பேச்சுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.
அத்துடன், இனம், பிரதேசம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும் அவதூறான மற்றும் வெறுக்கத்தக்க நடத்தைகளை கண்காணிக்கவும், அவற்றைத் தடுக்கவும், தண்டிக்கவும் கூடிய
தெளிவான மற்றும் வலுவான நாடாளுமன்ற நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். அவை முழுமையாகவும் கடைப்பிடிக்கத் தவறாத வகையிலும் அமல்படுத்தப்பட வேண்டும்.
மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் தங்களது உள்கட்டமைப்பு கொள்கைகள் மற்றும் ஒழுக்க விதிகளை உருவாக்கும் போது. இவ்வாறான வெறுப்பு பேச்சுக்களைத் தடுக்கும் உறுதியான வழிகாட்டுதல்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய கொள்கை மாற்றங்கள், நிலையான சமூக மாற்றத்திற்கும் நீடித்த சமூக அமைதிக்கும் அடித்தளமாக அமையும் – என்றனர்.
இதேவேளை, அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சி வாழ் மக்களை மிகவும் இழிவுப்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.
அவரின் இந்த கருத்திற்கு பல தரப்பினர்களும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
