
சீனாவின் அதிவேக ரயில் தொழில்நுட்பம் உலக நாடுகளுக்கு விஸ்தரிப்பு
சீனாவின் உள்நாட்டு அதிவேக ரயில் போக்குவரத்துச் சந்தை முதிர்ச்சியடைந்துள்ள நிலையில், சீன ரயில்வே நிறுவனங்கள் இனிவரும் ஆண்டுகளில் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளை நோக்கித் தங்களது கவனத்தைத் திருப்பவுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் 142 கி.மீ நீளமுள்ள ஜகார்த்தா-பான்டுங் அதிவேக ரயில் பாதை மற்றும் ஹங்கேரி-செர்பியா இடையிலான ரயில்வே திட்டம் ஆகியவற்றின் வெற்றியைத் தொடர்ந்து, சீனப் பொறியியல் நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்களது தடம் பதிப்பதைத் தீவிரப்படுத்தியுள்ளன.
சீனாவின் 5 இலட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 97 சதவீத நகரங்கள் ஏற்கனவே அதிவேக ரயில் சேவையால் இணைக்கப்பட்டுவிட்டன. இதனால், புதிய திட்டங்களுக்கான வாய்ப்புகள் உள்நாட்டில் குறைந்து வருவதே இந்த வெளிநாட்டு விரிவாக்கத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
சீன முதலீடுகளுக்கான அடுத்த இலக்குகளாக லாவோஸ், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மத்திய ஆசிய நாடுகளும் இந்தப் பட்டியலில் முன்னிலையில் உள்ளன.
பேங்கொக் முதல் நோங் காய் வரை 610 கி.மீ நீளமுள்ள ரயில் பாதையைச் சீன ஒப்பந்ததாரர்கள் அமைத்து வருகின்றனர். 2030-ல் இது நிறைவடையும் போது, லாவோஸ் வழியாகச் சீனா வரை பயணிகள் பயணிக்க முடியும்.
சீனத் தொடர்பாடல் கட்டுமான நிறுவனத்தால் (CCCC) அமைக்கப்படும் 665 கி.மீ நீளமுள்ள கிழக்கு-மேற்கு ரயில் திட்டம் 2027-ல் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கோலாலம்பூர் – சிங்கப்பூர் இடையிலான அதிவேக ரயில் திட்டத்திலும் சீன முதலீடுகள் வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ஜகார்த்தா-பான்டுங் அதிவேக ரயிலில் கடந்த அக்டோபர் வரை 1.2 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். இதன் வெற்றியைத் தொடர்ந்து புதிய நகர்ப்புற மெட்ரோ திட்டங்களுக்குத் தனியார் முதலீடுகளை இந்தோனேசியா ஈர்த்து வருகிறது.
அதிவேக ரயில் திட்டங்கள் அதிக மூலதனம் தேவைப்படுபவை. 2023 கணக்கின்படி, சீனாவில் ஒரு கிலோமீட்டர் அதிவேக ரயில் பாதை அமைக்க 17 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகிறது. வெளிநாடுகளில் இது இன்னும் அதிகமாக இருக்கக்கூடும்.
இது குறித்துப் பொருளாதார ஆலோசகர் சோங் செங் வுன் கூறுகையில், “பொறியியல் நிறுவனங்கள் புதிய வாய்ப்புகளைத் தேடினாலும், அந்தந்த நாட்டு அரசாங்கங்களின் நிதி நிலைமையைப் பொறுத்தே இத்திட்டங்கள் அமையும்” என்றார்.
பயணிகளின் எண்ணிக்கை போதுமானதாக இருந்தால் மட்டுமே இவ்வளவு பெரிய முதலீடுகளைத் திரும்பப் பெற முடியும் என்று ஆய்வாளர் ராகுல் கரன் ரெட்டி சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவின் இந்த “ரயில் இராஜதந்திரம்” அனைத்து நாடுகளிலும் எளிதாக அமையவில்லை. கடன் சுமை காரணமாக ஆப்பிரிக்க நாடான கென்யா போன்ற நாடுகள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.
சீனாவுடனான எல்லை மற்றும் அரசியல் முரண்பாடுகள் காரணமாக இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இத்தகைய திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வாய்ப்பில்லை என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
