சென் லெனாட் தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் – தீர்வை பெற்றுக்கொடுத்த செந்தில் தொண்டமான்

சென் லெனாட் தோட்டத்தில் அவுட் குரோஸ் முறையில் தொழிலாளர்களை தொழிலுக்கு அமர்த்தியிருந்த முகாமைத்துவம், அவர்களுக்கு ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 60 ரூபா வீதம் வழங்குவதாக கூறியிருந்தது. அதன் பிரகாரம் வழங்கப்பட்டு வந்த போதிலும், இந்த மாதம் தொழிலாளர்கள் போதுமான கொழுந்து பறித்து கொடுக்காததால் கிலோவுக்கு 60 ரூபா வழங்க வேண்டியதை 40 ரூபாவாக முகாமைத்துவம் மாற்றியுள்ளது.
இதனால் தொழிலாளர்கள் தங்களுக்கு 60 ரூபா வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் கோரிக்கையை தோட்ட முகாமைத்துவம் தொடர்ந்த நிராகரித்து வந்த நிலையில், இந்த விடயத்தை தொழிலாளர்கள், இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
உடனடியாக இந்த விடயத்தில் தலையீடுகளை மேற்கொண்ட செந்தில் தொண்டமான் தோட்ட முகாமைத்துவத்துடன் நடத்திய கலந்துரையாடலில், தோட்ட தொழிலாளர்கள் 1000 கிலோ கொழுந்து பறித்தாலும் 1 கிலோ பறித்தாலும் 60 ரூபா கொடுத்தாக வேண்டும் எனவும், இதில் எந்த டார்கட்களையும் நிர்ணயிக்க முடியாது எனவும் தோட்ட நிர்வாகத்திடம் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். கடந்த மாதம் 40 ரூபாய் வழங்கியதற்கு 60 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடாது எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். செந்தில் தொண்டமானின் பணிப்புரையை தோட்ட நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.
