மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் பலி

மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் பலி

கொழும்பு, மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கணவர் படுகாயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கினிகத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விராஜ் விதானகே தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் கொழும்பு மருதானையைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயார் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை, மில்லகஹமுல பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றதாகவும்.

நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரைப் பார்வையிட குறித்த தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

இதன்போது, கொழும்பிலிருந்து வட்டவளை நோக்கிச் சென்ற லொறியினை மோட்டார் சைக்கிள் சாரதி முந்திச் செல்ல முயன்ற போது, லொறியின் இடது பக்கத்தின் நடுப்பகுதியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் இருந்த பெண் லொறியின் இடது பின்புற சக்கரத்தின் கீழ் விழுந்து நசுங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (31) அதிகாலை 5.45 மணியளவில் நிகழ்ந்ததாகவும் மோட்டார் சைக்கிளின் சாரதியின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என்றும், சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ பரிசோதகரிடம் பிரேத பரிசோதனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

Share This