விம்பிள்டன் 2025 – பட்டம் வென்றார் போலந்தின் இகா ஸ்வியாடெக்

விம்பிள்டன் 2025 – பட்டம் வென்றார் போலந்தின் இகா ஸ்வியாடெக்

விம்பிள்டன் 2025 மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை தோற்கடித்து போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

லண்டனில் கோலாகலமாக நடந்து வந்த டென்னிஸ் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் மிக உயர்ந்த அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தோல்விகள் தொடர்ந்து அரங்கேறின.

இதன்படி, முறை விம்பிள்டன் சாம்பியனான ஜோகோவிச் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலியின் இளம் வீரர் ஜானிக் சின்னரிடம் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவி வெளியேறினார்.

இந்நிலையில், மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக்கை எதிர்கொண்டார். டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த போட்டி முழுக்க முழுக்க இகா ஸ்வியாடெக்கின் வசம் இருந்தது.

அவர் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை 6-0, 6-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இகா ஸ்வியாடெக் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வெல்லது இதுவே முதன்முறையாகும். அதே வேளையில் இது அவரது ஆறாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

சென்டர் கோர்ட்டில் நடந்த இந்த இறுதிப்போட்டியை தொடக்கம் முதல் இறுதி வரை இகா ஸ்வியாடெக்கே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

வெறும் 18 நிமிடங்களே நடந்த முதல் செட்டில் இகா ஸ்வியாடெக் 6-0 என்ற கணக்கில் வெற்றிவாகை சூடினார். சர்வ் மற்றும் ரிட்டர்ன் ஷாட்களில் கலக்கிய அவர் அமண்டா அனிசிமோவாவுக்கு ஒரு முறை கூட வாய்ப்பு கொடுக்கவில்லை.

இறுதிப்போட்டி பதற்றம் காரணமாக அமண்டா அனிசிமோவா செய்த தவறுகளை இகா ஸ்வியாடெக் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார். இரண்டாவது செட்டிலும் இதே நிலை தான்.

இகா ஸ்வியாடெக்கின் அசாத்தியமான சர்வ் மற்றும் ரிட்டர்ன் ஷாட்களுக்கு முன்பு அமண்டா அனிசிமோவாவால் ஓன்றுமே செய்ய முடியவில்லை. இரண்டாவது செட்டிலும் ராணியாக திகழ்ந்த இகா ஸ்வியாடெக் இதையும் 6-0 என்ற கணக்கில் கைப்பற்றி மிகப்பெரும் வெற்றியை ருசித்தார்.

அரையிறுதியில் உலகின் முதல்நிலை வீராங்கனையான அரினா சபலென்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்த அமண்டா அனிசிமோவா எந்தவித போராட்டமும் இன்றி சரணடைந்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

Share This