இரண்டாவது வயதானவராக வில்லியம்ஸ் சாதனை வெற்றி

வொஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் சக நாட்டு வீராங்கனை பெய்டன் ஸ்டேர்ன்ஸை தோற்கடித்து டபிள்யூ.டீ.ஏ. ஒற்றையர் போட்டி ஒன்றில் வெற்றியீட்டிய இரண்டாவது மிக வயதானவர் என அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் சாதனை படைத்துள்ளார்.
45 வயதாகும் வில்லியம்ஸ் நேற்று முன்தினம் (22) நடந்த போட்டியில் 22 வயது ஸ்டேர்ன்ஸுக்கு எதிராக முதல் சுற்று போட்டியில் 6–3, 6–4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். இதன்மூலம் 2004 ஆம் ஆண்டு மார்டினா நவரத்திலோவா தனது 47 வயது ஒற்றையர் போட்டி ஒன்றில் வெற்றியீட்டிய பின்னர் வெற்றிபெறும் அதிக வயதான வீராங்கனையாக பதிவானார்.
ஏழு முறை ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கும் வீனஸ் வில்லியம்ஸ் வைல்ட் கார்ட் அனுமதியுடனேயே இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளார். அவர் 2024 மார்ச் தொடக்கம் டென்னிஸ் போட்டிகளில் ஆடாது இருந்தார்.
குறிப்பாக ஸ்டேர்ன்ஸ் 2011 ஆம் ஆண்டு பிறக்கும்போதே வில்லியம்ஸ் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருந்தார். ‘நான் எதனையும் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை’ என்று வில்லியம்ஸ் போட்டிக்குப் பின்னர் குறிப்பிட்டார்.