இலங்கையில் அரிசி பற்றாக்குறை ஏற்படுமா?

இலங்கையில் அரிசி பற்றாக்குறை ஏற்படுமா?

இயற்கை பேரிடர் காரணமாக இலங்கையில்  நெல் சாகுபிடி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் ஆண்டில் அரிசி பற்றாக்குறை ஏற்படாதென ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உணவு முறைகள் பிரிவின் தலைவரும் மூத்த ஆராய்ச்சியாளருமான டபிள்யூ.எம். துமிந்த பிரியதர்ஷன கூறுகிறார்.

“இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிவரை, இயற்கை அனர்த்தங்களால் ஒரு இலட்சத்து எட்டாயிரம் (108,000) ஹெக்டேர் நெல் சாகுபடி முழுமையாக சேதமடைந்துள்ளது. இந்த சூழ்நிலையானது நெல் சாகுபடிக்கு ஏற்பட்ட சேதத்தைக் கருத்தில் கொண்டு, மொத்த நெல் உற்பத்தியில் ஒன்பது முதல் பன்னிரண்டு சதவீதம் வரை பாதிப்பு ஏற்படும்.

தற்போது பயிரிடப்படும் நிலத்தின் பரப்பளவையும் சேதமடைந்த நிலத்தின் பரப்பளவையும் கருத்தில் கொண்டால் இந்த பெரும் போகத்தில் (2025/2026) 2.5 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி உற்பத்தியை எதிர்பார்க்கலாம்.

இதன்மூலம் உற்பத்தி நாட்டின் நுகர்வோர் தேவைகளில் குறைந்தது ஏழு மாதங்களுக்கு போதுமான அரிசியை உற்பத்தி செய்ய முடியும்“ என்று துமிந்த பிரியதர்ஷன கூறுகிறார்.

அடுத்தாண்டு சிறுபோகம், மத்தியபோகம் மற்றும் பெரும்போக உற்பத்திகளில் பாதிப்பு ஏற்படாவிடின் அரிசியை இறக்குமதி செய்யும் தேவை ஏற்படாதெனவும் அவர் தெரிவித்தார்.

இந்த பெரும் போகத்தில் கிடைத்த அதிக மழை காரணமாக, 2026 சிறுபோகத்தில் 0.5 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் சாகுபடி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்  அவர் மேலும் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )