ருஸ்தி மேல் பாயும் பயங்கரவாத தடை சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா?

ருஸ்தி மேல் பாயும் பயங்கரவாத தடை சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா?

ருஸ்தி மேல் பாயும் பயங்கரவாத தடை சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிண்ணியாவில் eடைபெற்ற பலஸ்தீனத்துக்கான நீதிகோரல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

ருஸ்தியின் கைதுக்கு பின்னால் பாரிய அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்று உள்ளது. ஸ்டிக்கர் ஒட்டியதற்கு பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கவிதை எழுதிய முஸ்லிம் இளைஞன் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அரசால் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிகழ்வையே இது நினைவு கூறுகிறது.

தற்போது இந்த கைதுக்கு பொலிசாரால் சொல்லப்பட்டுள்ள காரணத்தை பார்க்கும்போது அவர்கள் ருஸ்தியை குற்றவாளியாக்க காரணத்தை தற்போதுதான் தேடுவதாக உணர்கிறோம்.

பொலிஸாரின் கூற்றுப்படி அவர் அடிப்படைவாத கருத்துக்களை கொண்டிருப்பின் ஸ்டிக்கர் ஒட்டும்வரை அவர் ஒரு அடிப்படைவாதி என அவர்களுக்கு தெரியாதா?

இலங்கையில் ருஸ்தி மட்டும்தானா அடிப்படைவாத கருத்துக்களை கொண்டிருக்கிறார். ஒவ்வொரு சமூகத்திலும் தாம் சார்ந்த சமூகத்தின் அடைப்படைவாத கருத்துக்களை கொண்ட பலர் உள்ளனர். அவ்வாறெனில் அவர்கள் அனைவரையும் கைது செய்ய முடியுமா? அடிப்படைவாத கருத்துக்களை வெளிப்படையாக கூறும் பிக்குகள் மீது இந்த சட்டம் பாயுமா?

இஸ்ரேலுக்கு எதிராக ஒரு ஸ்டிக்கர் ஒட்டியதுக்கே பயங்கரவாத சட்டம் என்றால் அதன் பின்புலம் என்ன? இந்த அரசு இஸ்ரேலின் பாதுகாவலனாகவே செயற்படுகிறது என்பது தெளிவாகிறது.

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவோம் ,இன, மத பேதமற்ற அரசு என்ற கோஷங்களுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசு, தற்போது அதே பயங்கரவாத சட்டத்தையே ராஜபக்சக்களை விட மோசமாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது. இந்த இரட்டை வேடத்துக்கு விரைவில் மக்கள் பதில் வழங்குவார்கள். ருஸ்தியின் விடுதலைக்காக நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This