சவேந்திர சில்வாவின் பதவி நீடிக்கப்படுமா? இன்னமும் முடிவு இல்லை என்கிறது அநுர அரசு
பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக் காலத்தை நீடிப்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று அரசு அறிவித்துள்ளது.
பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக இருந்துவரும் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக் காலம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.
எனினும், தற்போது வரையில் அவரது பதவிக் காலம் நீடிக்கப்படுமா அல்லது அப்பதவிக்கு புதியவர் நியமிக்கப்படுவாரா என்பது தொடர்பில் எவ்விதமான அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயம் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போது,
“பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பதவிக் காலம் சம்பந்தமாக இதுவரையில் எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை. அதுதொடர்பில் விரைவில் தீர்மானம் எடுப்போம்.” – என்று குறிப்பிட்டார்.
இலங்கையின் 23ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பதவி வகித்திருந்த நிலையில் 2022ஆம் ஆண்டு ஜுன் முதலாம் திகதி பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் கடந்த ஜுன் மாதம் முதலாம் திகதி அவருடைய பதவிக் காலம் நிறைவுக்கு வந்திருந்தபோதும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் 31ஆம் திகதி வரையில் பதவிக் காலத்தை நீடிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.