அப்புத்தளை பிட்டரத்மலை, தம்பேதன்ன தோட்டங்களில் காட்டு யானைகள் நடமாட்டம்
ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அப்புத்தளை தம்பேதன்ன மற்றும் பிட்டரத்மலை ஆகிய தோட்டங்களில் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் இரு காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்பட்ட நிலையில் அவற்றை மீண்டும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்போடு மீரியபெத்த வன பகுதிக்கு விரட்டியுள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த 27 ஆம் திகதி இரவு வேளையில் மீரியபெத்த பகுதியில் இருந்து மவுசாகல வழியாக தாய் யானையும் அதன் குட்டியும் தம்பேதன்ன தோட்டத்தின் புதுக்காடு பகுதிக்கு பிரவேசித்துள்ளன.
ஊர் மக்கள் யானைகளின் நடமாட்டத்தை அவதானித்து பட்டாசுகளை வெடித்து அவற்றை விரட்டிய போது வழித் தவறிய குட்டி யானை பிட்டரத்மலை தோட்டத்திற்குள் நுழைந்துள்ளது. யானைகளின் நடமாட்டத்தால் மரக்கறி செய்கை நிலங்கள் சிலவற்றிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேலின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த யானைகளை மீண்டும் வனப் பகுதிக்கு நேற்று மாலை விரட்டியுள்ளனர்.
யானைகளின் நடமாட்டத்தால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதோடு, யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு வேலிகளை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.