காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வங்கிகள் ஏன் கருத்தில் கொள்ளவில்லை?

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வங்கிகள் ஏன் கருத்தில் கொள்ளவில்லை?

பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாத வகையில் வங்கிகளால் விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பதிலளிக்க இலங்கை மத்திய வங்கி தவறியுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வங்கி பரிவர்த்தனைகளின் போது, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் வழங்கிய கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழை
ஏற்றுக்கொள்ள வங்கிகள் மறுப்பதை தடுக்க உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட விரிவான அறிக்கையை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவுறுத்தியிருந்தது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ரஞ்சித் உயன்கொட இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு அனுப்பிய கடிதத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வு மற்றும் மேற்பார்வைப் பிரிவின் பணிப்பாளருக்கு அறிக்கையை அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.

எனினும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இறுதித் தினமான ஜனவரி 14ஆம் திகதி, மத்திய வங்கியினால் மனித உரமைகள் ஆணைக்குழுவிற்கு பதிலளிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. காலக்கெடு முடிந்து ஒரு நாள் கழித்து இலங்கை மத்திய வங்கி கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

“முல்லைத்தீவு மாவட்ட மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புப் பயணம் தொடர்பாக” 2025 ஜனவரி 2ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பாதிக்கும் இந்தப் பிரச்சினையை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த வருட இறுதியில் முல்லைத்தீவில் மேற்கொண்ட கண்காணிப்பில் அடையாளம் கண்டுள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கடந்த டிசம்பரில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று முல்லைத்தீவு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் வழங்கப்பட்ட காணாமற் போனோருக்கான சான்றிதழை வங்கிகள் புறக்கணிக்கின்றமை விசேட அம்சமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால், அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் வங்கிச் சேவையில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது.”

ஜனவரி 15 ஆம் திகதி இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்திற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இதற்கான காரணங்களைக் கண்டறியும் முதல் நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக, ஜனவரி 21ஆம் திகதிக்குள் பதில் அளிக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம், இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் இலங்கையிலுள்ள அனைத்து பொது மற்றும் தனியார் வங்கித் தலைவர்களுக்கும் மின்னஞ்சலை அனுப்பி,  கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழை சரியான ஆவணமாக ஏற்றுக்கொள்ளாமைக்கான காரணம் மற்றும் காணாமல் போனவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புடைய வங்கிச் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழுக்குப் பதிலாக வங்கிகள் கோரும் வேறு ஆவணங்கள் என்னவென்பது குறித்த தகவல்களை ஜனவரி 20ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வு மற்றும் மேற்பார்வைப் பிரிவின் பிரதிநிதி ஒருவரைத் தொடர்புகொண்டு காரணங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறித்து மத்திய வங்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதா என்பதை விசாரிக்க நாம் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

Share This