கொழும்பை ஆளப்போவது யார்?

பல தசாப்தங்களாக தனது ஆட்சி அதிகாரத்தின்கீழ் இருந்த மிக முக்கிய உள்ளுராட்சி மன்றங்களில் ஒன்றான கொழும்பு மாநகர சபையை இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி இழந்துள்ளது. குறித்த சபைக்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தாலும் ஆட்சி அமைப்பதற்குரிய அறுதிப்பெரும்பான்மை பலம் தேசிய மக்கள் சக்திக்கும் கிடைக்கப்பெறவில்லை.
இந்நிலையில் எதிரணிகளை ஒன்றிணைத்து கொழும்பு மாநகரசபையில் ஆட்சி நிலைநாட்டப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் 81 ஆயிரத்து 814 வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு 48 இடங்கள் கிடைத்துள்ளன.
58 ஆயிரத்து 375 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 29 உறுப்பினர்களும், 26 ஆயிரத்து 297 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 13 பேரும் சபைக்கு தெரிவாகியுள்ளனர்.
அத்துடன், கொழும்பு மாநகரசபையில் 9 ஆயிரத்து 341 வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 5 இடங்களும், 8 ஆயிரத்து 60 வாக்குகளைப் பெற்ற முஸ்லிம் காங்கிரசுக்கு 4 இடங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஏனைய கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களுக்களில் இருந்து 18 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.
117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப்பெரும்பான்மையை பெறுவதற்கு 59 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த வகையில் தேசிய மக்கள் சக்திக்கு இன்னும் 11 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது.
மறுபுறத்தில் எதிரணி மற்றும் சுயேச்சைக்குழுக்கள் வசம் 69 இடங்கள் உள்ளன.
இந்நிலையிலேயே கொழும்பு மாநகரசபையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முயற்சித்துவருகின்றது.