புதிய அரசமைப்பு இயற்றும் பணி எப்போது? அரசு கூறும் பதில்

”பொருளாதார ரீதியிலான சவால்களை எதிர்கொண்ட பின்னரே புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணி ஆரம்பமாகும். இதனை அவசர அவசரமாக செய்துவிட முடியாது.” என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அரசமைப்பு பழமையானது. அடிப்படை உரிமை, இனப்பிரச்சினைக்கான நிலையான தீர்வு என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய தேவைப்பாடு உள்ளது. எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது பற்றி உறுதியளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் யோசனை, மக்களின் கருத்து என்பவற்றை உள்வாங்கி சர்வஜன வாக்கெடுப்புடன் இது நிறைவேற்றப்படும். இதற்கு முன்னர் இயற்றப்பட்ட அரசமைப்புக்கு மக்கள் அனுமதி கிட்டவில்லை.
இதனை அவசரமாக செய்ய முடியாது. தற்போது பொருளாதாரப் பிரச்சினையே பிரதானமாகியுள்ளது. பூகோல அரசியலும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளது. இந்த சவால்களை எதிர்கொண்ட பின்னர் புதிய அரசமைப்பு பணி இடம்பெறும்.” – என்றார்