தேசபந்து தென்னகோன் சரணடைந்திருக்காவிடின் என்ன நடந்திருக்கும்?

முன்னாள் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சரணடைவதில் தாமதம் ஏற்பட்டிருந்த அவரது சொத்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
வெலிகம – பெலென பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் தேசபந்து தொன்கோன் தலைமறைவாகியிருந்தார். பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று புதன்கிழமை நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.
இதுகுறித்து இன்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ள பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால,
”சரணடைவதில் கொஞ்சம் தாமதம் அடைந்திருந்தாலும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் சொத்துக்களை முடக்கப்பட்டிருக்கும. நீதிமன்றத்தில் சரணடையாத காரணத்தால் அவரது சொத்துக்களை முடக்கும் முயற்சிகளை பொலிஸார் முன்னெடுக்க இருந்தனர். மயிரிழையில் அவர் தப்பியுள்ளார்.” என்றார்.
தேசபந்து தென்னகோனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான மதுபான போத்தல்கள் மற்றும் தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.