
சமாதான பேச்சுகள் எப்படி இருந்தன – புத்தகமொன்றின் ஊடாக விளக்கமளிக்க தயாராகும் ஜீ.எல்.பீரிஸ்
‘The Sri Lanka Peace Process: An Inside View’ என்ற பெயரில் இந்த புத்தகத்தை அவர் வெளியிட உள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் முக்கிய விவரங்களை இந்தப் புத்தம் வெளிப்படுத்தும் என புத்தகத்தை வெளியிட உள்ள விஜித யாப்பா பப்ளிகேஷன்ஸ் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து மற்றும் கம்போடியா, காசா பகுதி மற்றும் உக்ரைனில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான அமைதி முயற்சிகளை உலகம் உன்னிப்பாகக் கவனித்து வரும் இந்த தருணத்தில், பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் இந்தப் புத்தகம் உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் என விஜித யாப்பா பப்ளிகேஷன்ஸ் கூறியுள்ளது.
30 ஆண்டுகால கொடூரமான மோதல் முடிவுக்கு வரும் என்ற பரவலான சர்வதேச எதிர்பார்ப்புக்கு மத்தியில், செப்டம்பர் 16, 2002 அன்று தாய்லாந்தில் இருதரப்புக்கும் இடையிலான சமாதானப் பேச்சுகள் ஆரம்பமாகின.
சர்வதேச ஆய்வுகள், கட்டமைப்பு பலவீனங்கள், போட்டி நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் சரிவதற்கு வழிவகுத்த அரசியல் பலவீனம் ஆகியவற்றின் மத்தியில், மிகவும் சிக்கலானதாக சமாதான பேச்சுகள் முடிவுக்கு வந்திருந்தன.
இந்த புத்தகம் அந்த பயணத்தை விரிவாக ஆராய்கிறது. இது சமாதான செயல்முறையின் வடிவமைப்பு, அதன் பலங்கள் மற்றும் உள்ளார்ந்த குறைபாடுகள், அடையப்பட்ட சாதனைகள் மற்றும் அதன் தோல்விக்கு வழிவகுத்த காரணிகளையும் பகுப்பாய்வு செய்கிறது என்றும் விஜித யாப்பா பப்ளிகேஷன்ஸ் கூறியுள்ளது.
