ஜனாதிபதி தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் என்ன நடந்தது?

ஜனாதிபதி தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் என்ன நடந்தது?

அமெரிக்காவின் புதிய பரஸ்பர வரி விதிப்பு குறித்து நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் மற்றும் அதற்கு பதிலளிக்கும் வகையில் எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதியைச் சந்தித்து முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கையை எதிர்கொள்வதில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட குழுவால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்தும், இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி கட்சித் தலைவர்களுக்கு விளக்கினார்.

சம்பந்தப்பட்ட குழுவால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் இது தொடர்பாக எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

அமெரிக்க அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான திட்டங்களைத் தயாரிப்பது மற்றும் ஏற்றுமதி இலக்குகளை பல்வகைப்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்து கட்சித் தலைவர்களுடன் எதிர்காலத்தில் கலந்துரையாடலை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஹர்ஷ டி சில்வா, தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் சாணக்கியன் இராசமாணிக்கம், புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ரவி கருணாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக டீ.வி.சானக்கவும், தமிழ் முற்போக்குக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் இங்கு தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் ரிஷாத் பதியுதீன், சர்வஜன அதிகாரம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் திலித் ஜயவீர, ஐக்கிய தேசிய கட்சி சார்பாக ஜீவன் தொண்டமான், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தயாசிறி ஜயசேகர, அர்ச்சுனா இராமநாதன் ஆகியோரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வில் கயந்த கருணாதிலக, காவிந்த ஜயவர்தன, எஸ்.எம். மரிக்கார், காதர் மஸ்தான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Share This