சம்பத் மனம்பேரியால் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ஆயுதங்கள் மீட்பு

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் சம்பத் மனம்பேரியால் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான சம்பத் மனம்பேரியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மித்தெனிய பகுதியில் உள்ள காணியில் இருந்து புதைக்கப்பட்டிருந்த நிலையில், துப்பாக்கி தோட்டாகள் உள்ளிட்ட ஆயுதங்களை மேற்கு, வடக்கு குற்றப்பிரிவினர் மீட்டுள்ளனர்.
இதன்படி, தங்க நிறத்திலான இரண்டு டி56 மெகசின்கள், 115 டி56 தோட்டாக்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் உடைந்த பிஸ்டல் துப்பாக்கி ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்றாம் திகதி காணி ஒன்றில் இந்த ஆயுதங்களை புதைத்து வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மிதெனிய – தலாவ பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் இருந்து ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பத் மனம்பேரி நீதிமன்றில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 17ஆம் திகதி வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர், கைது செய்யப்பட்ட அவர் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்ய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.