மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் கூட்டு சேர மாட்டோம்

மக்கள் நிராகரித்த எந்தவொரு கட்சியுடனும் கூட்டணியை அமைத்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் எண்ணம் தேசிய மக்கள் சக்திக்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஊழல் இல்லாத தேசிய சீர்திருத்த திட்டத்தை தொடர ஒரு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி அமைப்புகளில் பெரும்பான்மையானவற்றி கட்டுப்பாட்டைப் பெற தேசிய மக்கள் சக்தியால் முடிந்தது. இருப்பினும், ஒரு கட்சியாக நாங்கள் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தாலும், மற்ற கட்சிகள் கூட்டாக அதிக இடங்களைப் பெற்றுள்ள சில உள்ளூராட்சி நிறுவனங்கள் உள்ளன.
தனித்தனியாகப் போட்டியிட்ட சிறிய கட்சிகள் தங்கள் முடிவுகளை இணைத்து பெரும்பான்மையைக் கோர முயற்சித்தால் அது யதார்த்தமானதாகவோ அல்லது நியாயமாகவோ இருக்காது.
தேசிய மக்கள் சக்தியை தவிர வேறு எந்தக் கட்சியாலும் சபைகள் மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பெற முடியவில்லை. சில கட்சிகளால் ஒன்று அல்லது இரண்டு இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.
பல அரசியல் கட்சிகளின் சிறிய வெற்றிகளையும் கூட்டி சபைகளில் ஆட்சியை உருவாக்க முயற்சித்தால் அது ஜனநாயகம் அல்ல. மக்களால் நிராகரிக்கப்பட்ட குழுக்கள் தான் இவை.
தனி ஒரு கட்சியாக தேசிய மக்கள் சக்தி தெளிவான மற்றும் முன்னணி வெற்றியைப் பெற்றுள்ளது. இது சிறப்பு வாய்ந்தது. அதிகாரங்களை நிறுவுவதற்கு சுயாதீன குழுக்களுடன் இணைந்து செயல்பட தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.
ஆனால் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்காது. முன்னணி கட்சியாக, எங்களுக்கு ஆட்சி செய்ய உரிமை உண்டு. தேசிய மக்கள் சக்தி மீதான நம்பிக்கையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.