ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்போம் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை

ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்போம் – பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை

உக்ரைன் மீதான தாக்குதல்களை நிறுத்தும் வரை ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிப்போம் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன்-ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷ்ய ஜனாதிபதி புடினினுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும், அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சென்றுள்ளார்.

இந்நிலையில், ‘விருப்ப கூட்டணி’ என்ற பெயரில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானும், ஜெர்மன் ஜனாதிபதி பிரைட்ரிச் மெர்சும் காணொளி ஊடாக பேசினர். அதில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் கலந்துகொண்டார்.

இதன் போது பேசிய பிரித்தானிய பிரதமர்,

“அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன்னெப்போதையும் விட நம்மை நெருக்கமாக ஒன்றுசேர்த்துள்ளன.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை இணைத்தே போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அவர் இல்லாமல் உக்ரைன் பிரச்சினைக்கான அமைதி தீர்வை முடிவு செய்ய முடியாது.

உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை புடின் நிறுத்தும் வரை, ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிப்போம். அவை ரஷ்ய பொருளாதாரத்துக்கும், அதன் மக்களுக்கும் ஏற்கனவே தண்டனையாக அமைந்துள்ளன.” என்றார்.

Share This