எரிபொருள் மீதான வரிகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் உறுதி

எதிர்காலத்தில் எரிபொருள் மீதான வரிகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறும் நிலையில், தேசிய மக்கள் சக்தி வாக்குறுதியளித்ததுப் போன்று எரிபொருள் மீதான வரிகள் குறைக்கப்படுமா என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
எரிபொருளுக்கு நியாயமற்ற வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் தரகுப் பணம் பெறுவதாகவும் தேசிய மக்கள் சக்தி கூறியதாக தயாசிறி ஜயசேகர இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர்,
“வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கியுள்ளது. எந்தவொரு வரிகளும் விதிக்கப்படவில்லை.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எவ்வாறு நட்டத்தில் இயங்கக்கூடிய நிறுவனமாக மாற்றப்பட்டது என்றும், முன்னாள் அமைச்சர் எவ்வாறு தொடர்புபட்டுள்ளார் என்பது குறித்தும் விரிவான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்” என அமைச்சர் தெரிவித்தார்.