தீர்வுத் திட்ட நகர்வு பற்றி 18 இல் முடிவு எடுப்போம் – சுமந்திரன்

தீர்வுத் திட்ட நகர்வு பற்றி 18 இல் முடிவு எடுப்போம் – சுமந்திரன்

“புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பேசி வருகின்ற விடயம் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்துக்கு எதிரான நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் பேசி முடிவெடுப்போம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உடுப்பிட்டி மதுபானசாலை ஏன் தொடர்ந்தும் இயங்க வேண்டும் என்பது தொடர்பில் வழக்கு சாட்சியமளிப்பு இடம்பெற்று வருகின்றது. நாட்டிலே அதிகரித்த மதுபானசாலைகள் தொடர்பில் பல பிரச்சினைகள்  எழுந்துள்ளன. அதிகரித்த மதுபானப் பாவனையால் நேற்றும் பருத்தித்துறையில் வாள்வெட்டு, கத்திக் குத்து இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் இன்று நீதிமன்றின் முன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான நிலை நாட்டுக்கு நல்லதல்ல.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சமாக கடந்த காலத்தில் பார் லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இலஞ்சத்தை ஒழிப்போம், பார் லைசன்ஸ் விவகாரத்தை வெளிப்படுத்துவோம் என்று கூறி வந்தவர்கள் இன்று வரை அதனை வெளிப்படுத்தவில்லை. இவர்களும் இலஞ்சத்துக்குத் துணைபோனவர்களாகத்தான் பார்க்க முடியும். நாம் சவால் விடுகின்றோம், முடிந்தால் பார் லைசன்ஸ் விவகாரத்தை உடன் வெளியிடுங்கள். இல்லையேல் நீங்களும் ஊழல்வாதிகள்தான்.

இலங்கை விடயம் சம்பந்தமாக தி.மு.கவின் எம்.பி. கனிமொழியுடன் சந்திப்பை நடத்தியிருந்தோம். மத்திய அரசில் தமிழ் மக்கள் தொடர்பில் கரிசனை குறைந்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் தீர்வு விடயத்தில் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு மூன்று ஆண்டுகள் தேவை என்று கூறுகின்றது. அவ்வாறு தேவையில்லை. இது ஏற்கனவே இணங்கிக் கொண்ட விடயம். எனவே, இவ்வளவு காலம் தேவையில்லை. காலத்தை இழுத்தடிப்பது அதை இல்லாமல் செய்வதற்கான ஒரு திட்டம்.” – என்றார்.
…………….

Share This