தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்பட முயற்சித்தோம் – கலையரசன் தடுத்துவிட்டதாக ஹக்கீம் குற்றச்சாட்டு

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்பட முயற்சித்தோம் – கலையரசன் தடுத்துவிட்டதாக ஹக்கீம் குற்றச்சாட்டு

சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைகள் பாரிய பிரச்சினைகளை கொண்டது. அவற்றில் வீரமுனை வட்டாரமும் பிரச்சினைகளை கொண்டது. இந்தப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மாற்று வழியாக நடைபெறும் சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் தமிழரசு கட்சியில் எமது வேட்பாளரை போட்டியிட செய்து அவர்களின் உடன்பாட்டுடன் அந்த வட்டாரத்தை வெல்ல வைக்க முடியுமா என்ற முயற்சியை செய்து பார்த்தோம். இதே போன்ற பிரச்சினை நாவிதன்வெளியிலும் இருந்தது. இந்த விடயங்களில் தமிழரசு கட்சியின் தலைமைகள் இணக்கம் தெரிவித்தன. துரதிஷ்டவசமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இணங்க வில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய ரவூப் ஹக்கீம்,

சம்மாந்துறை பிரதேச சபையின் வீரமுனை வட்டாரத்தில் நிர்மாணப்பணி ஒன்று தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கொன்று இருந்த போதிலும் மு.காtவின் செயலாளர் நிஸாம் காரியப்பரை அந்த வழக்கில் (முஸ்லிங்கள் சார்பில்) ஆஜராக வேண்டாம் என்றும் சொல்லியிருந்தேன். ஏனெனில் இந்த விடயத்தை சாதித்து கொள்வதற்காக. ஆனால், அது சாத்தியமாகவில்லை. ஏனெனில் சென்ற தடவை கூட நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவதில் அந்த வட்டாரத்தில் நிறைய குளறுபடிகள் ஏற்பட்டன என்பது எல்லோருக்கும் தெரியும்.

மேலும், தொலைபேசி சின்னம் (ஐக்கிய மக்கள் சக்தி) செத்து போய்விட்டது. அவர்களுடனான உறவு குறித்து இந்த தேர்தலில் மட்டுமல்ல இனிவரும் தேர்தல்களிலும் சிந்திக்க வேண்டியுள்ளது. தொலைபேசி சின்னத்துக்கு இங்கு வாக்களிக்க சொல்ல நாங்கள் தயாராக இல்லை.

கண்டி மாவட்டத்தில் தனித்து கேட்கும் தீர்மானத்தை எடுத்துள்ளேன். வேட்பாளர்களினதும், அமைப்பாளர்களினதும் மன்றாட்டம் காரணமாக 03 இடங்களில் மட்டும் நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளோம். 11 இடங்களில் தனித்து களமிறங்கியுள்ளோம்.” என்றார்.

Share This