மாகாணசபைத் தேர்தல் வேண்டும்: முன்னாள் முதல்வர் வலியுறுத்து – வரதராஜப்பெருமாள்

மாகாணசபைத் தேர்தல் வேண்டும்: முன்னாள் முதல்வர் வலியுறுத்து – வரதராஜப்பெருமாள்

”தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உள்ள அனைத்து கட்சிகளும், இலங்கையில் உள்ள அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும், மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” – இவ்வாறு இணைந்த வடக்கு – கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“மாகாண சபைத் தேத்தல் தொடர்பில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் உள்ள கட்சிகளோடு நான் இணைந்து அண்மையில் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தேன். மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக எந்த வகையான காரணமும் சொல்லி காலம் தாழ்த்தாமல் உடனடியாக வைக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கையை அனைத்து தமிழ் பேசுகின்ற மக்கள் மத்தியில் உள்ள கட்சிகளும் இலங்கையினுடைய அனைத்து கட்சிகளோடும் இணைந்தும் தனித்தனியாக முன் வைக்க வேண்டும் என்ற இணக்கத்தோடு இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது என்று என்று நான் நினைக்கிறேன்.

தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது இலங்கை மக்கள் அனைவருடைய கோரிக்கையாகத்தான் பார்க்கிறேன். நடத்தப்பட வேண்டிய தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் இருப்பது அரசியல் யாப்புக்கும் விரோதமானது.

ஜனநாயகத்தை விரோதமாக்கி அதிகாரத்தில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தியினர் காரணங்கள் எதையும் கூறாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.

அரசியல் கட்சிகளுடைய தலைவர்களோடும் இலங்கையினுடைய பல்வேறு சமூகங்களின் உடைய அரசியல் சமூக பிரமுகர்களோடும் நான் நடத்தி வருகின்ற சந்திப்புகள் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதல்ல. தேர்தல் இன்று வந்தால்தான் எப்படி ஒரு கட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று பிரச்சினையே வரும். அந்த விடயங்களுக்குள் நான் எந்தவிதமான அக்கறையும் செலுத்துவதற்கு இல்லை. யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நடந்தால் யார் மாகாணத்தின் முதலமைச்சர் என்பது தெரியவரும்.

அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மாகாண ஆட்சிக்கான தேர்தலை அரசை நடத்த வைப்பது, எப்படி நாங்கள் உறுதிப்படுத்துவது என்பது பற்றியதும், மாகாண ஆட்சிக்கான அதிகாரங்களை எப்படி முழுமையாக முறையாகவும் பெற்றுக்கொள்வது என்பது பற்றியதுமான கலந்துரையாடலாகவே அமைந்தது.

அதில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கு பற்றி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதுவேதான் உரையாடலாக இருந்திருக்கும் .அது தொடர்பாக கட்சி எவ்வாறு அவற்றை முகம் கொடுக்கும் என்பது இப்போதைக்கு மிகப் பிரதானமான விடயம் அல்ல. அதற்கு முதலில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உள்ள அனைத்து கட்சிகளும் இலங்கையில் உள்ள அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும் அரசை மாகாண சபைத் தேர்தலை நடத்த வைக்க வேண்டும்.” – என்றார்.

Share This