
மனித வளத்தைப் பயன்படுத்தி புதிய இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் – ஜனாதிபதி
நாட்டின் மனித வளத்தைப் பயன்படுத்தி, வேறுபாடுகளைப் புறந்தள்ளி, பொருளாதார ரீதியாக வலுவான புதிய இலங்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்காக நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற 78வது தேசிய சுதந்திர தின விழாவில் இன்று (04) காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“133 ஆண்டுகால அடக்குமுறை மற்றும் காலனித்துவ ஆட்சிக்குப் பின்னர் 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றது.
எமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக காலனித்துவத்திற்கு எதிராக தாய்நாட்டிற்காக தங்களின் இரத்தம், கண்ணீர் மற்றும் வியர்வையை தியாகம் செய்தனர்.இதனை ஒருபோதும் மறக்க முடியாது.
சுதந்திரம் அடைந்த 78 ஆண்டுகளில் வெற்றிகளும் தோல்விகளும் ஏற்பட்டுள்ளன. நல்லதும் இருந்துள்ளது, கெட்டதும் இருந்துள்ளது. கெட்டதை நிராகரிக்க நாங்கள் தயங்குவதில்லை.
அதேபோல், நல்லதை உள்வாங்க நாங்கள் பயப்படுவதில்லை.எனவே, கடந்த காலத்தின் வளமான மண்ணில் இந்த இலங்கை அரசை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது.
எங்கள் அகராதியில் உள்ள இரண்டு மோசமான சொற்கள் இனவெறி மற்றும் தீவிரவாதம். இவை இரண்டும் எங்கள் பலத்தை அழிக்கவும் பலவீனப்படுத்தவும் மட்டுமே முடியும்.
நாட்டில் எந்தவொரு இனவெறி அல்லது தீவிரவாதத்தையும் அனுமதிக்க மாட்டோம், மேலும் நாட்டில் தேசிய ஒற்றுமையை உருவாக்குவோம்” என்றார்.
