‘மாடி வீடு எமக்கு வேண்டாம்’, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் காணி உரிமைக்கோரி ஆர்ப்பாட்டம்  

‘மாடி வீடு எமக்கு வேண்டாம்’, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் காணி உரிமைக்கோரி ஆர்ப்பாட்டம்  

தங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதிய உயர்வு மற்றும் வீடமைப்பிற்கான காணி உள்ளிட்ட உரிமைகளை வலியுறுத்தி, சர்வதேச தேயிலை தினத்தில், மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் பெருந்தோட்ட சமூகத்தின் அடிப்படை உரிமைகளை வழங்க அரசாங்கமும் பிற அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டி, உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்க ஆர்வலர்களுடன் இணைந்து நுவரெலியா மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை 2019 ஆம் ஆண்டு மே 21ஆம் திகதியை சர்வதேச தேயிலை தினமாக அறிவித்தது.

“தேயிலை உற்பத்தி மற்றும் நுகர்வை நிலைநிறுத்துவதும், பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்” தேயிலை தினத்தின் நோக்கம் என ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிடுகிறது.

சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு மே 21ஆம் திகதி நுவரெலியா நகர சபைக்கு முன்பாகவிருந்து நுவரெலியா மாநகர சபை மண்டபம் வரை தொழிலாளர்கள் பேரணியாகச் சென்று, “மலையகத் தமிழர்கள் என்ற எங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்து, எங்களுக்கு மாடி வீடுகள் வேண்டாம், புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையை அமைச்சின் கீழ் கொண்டுவராதே” போன்ற கோசங்களை எழுப்பியதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற செயற்பாட்டாளரான, கே.யோகேஸ்வரி, நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் பெண்களின் உழைப்புக்கு அதிகாரிகள் கெளரவமான ஊதியத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

“குறிப்பாக பெண்கள் நம் நாட்டிற்கு வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித் தருவதில் பெரும் பங்களிப்பை வழங்குகிறார்கள். ஆனால் இன்று பெண்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். குறிப்பாக வேலை செய்யும் பெண்கள், அவர்களில் பெரும்பாலோர் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஊதியத்தையே பெறுகின்றனர். அந்த சிறிய சம்பளத்தில் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இது ஒரு பெரிய பிரச்சினை. அவர்களின் உழைப்பிற்கேற்ற சம்பளம் கிடைக்காமையால், அந்தக் குடும்பங்களில் எப்போதும் வறுமை நிலவுகிறது.”

தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகளுக்குத் தெரிவித்த அவர், தொழிலாளர்களை மனிதாபிமானத்துடன் நடத்துமாறு ஆட்சியாளர்களை மேலும் வலியுறுத்தினார்.

சர்வதேச தேயிலை தினத்தன்று, மலையகத் தமிழ் மக்கள், தோட்டத் தொழிலாளர்களுக்கு காணியுடன் கூடிய ஒற்றைக் குடும்ப வீட்டுத் திட்டத்தை செயற்படுத்தவும், தமது பிள்ளைகளின் கல்வி நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

Share This