உள்நாட்டுக்குள் பேச்சுமூலம் தீர்வைக் காண்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் – சிறிதரன்

” உள்நாட்டுக்குள் பேச்சுமூலம் தீர்வைக் காண்பதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். அதற்குரிய எமது தரப்பு கதவு திறந்தே உள்ளது. ஆனால் அரச தரப்பில் இருந்து இன்னும் அதற்குரிய கதவு திறக்கப்படவில்லை.”
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
குற்றம் இழைத்த தரப்பே விசாரணைகளை முன்னெடுத்தால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எப்படி நீதி கிடைக்கும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மனித உரிமைகள் தொடர்பில் பிரச்சினைகள் தொடர்பில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை நேற்று முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பேச்சுக்கு தமிழர் தரப்பு தயாராகவே இருக்கின்றது. தந்தை செல்வா காலம் முதல் தலைவர் பிரபாகரன் காலம்வரை பல தடவைகள் பேசியுள்ளோம். சம்பந்தன் ஐயா காலத்திலும் பேச்சுகளில் ஈடுபட்டோம்.
இந்நாட்டுக்குள் ஒரு தீர்வைக் காண்பதற்கு எப்போதும் தயாராக இருக்கின்றோம். உங்களோடு கைகோர்த்து உரிமையைப் பெற்றுக்கொள்ள எமது தரப்பு பேச்சு கதவு திறந்துள்ளது. உங்களிடமிருந்து அதற்குரிய சேதி வரவில்லை. உங்களால் (அரசால்) இன்னும் பேச்சுவார்த்தைக்கான கதவை திறக்க முடியாதுள்ளது. ஒரு வருடம் நெருங்கிவிட்டது. இனியும் இருப்பீர்களா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.
அதேவேளை, கலப்பு விசாரணைப் பொறிமுறையை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவா மாநாட்டில் ஏற்றிருந்தார். அது தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவருக்கு யார் நீதியை வழங்குவது? எம்மீது எவர் குற்றம் புரிந்தாரோ – அவர்மீதான விசாரணை நடைபெறும்வரை – குற்றவாளி தண்டிக்கப்படும்வரை நாம் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளோம். எம்மீது எவர் கொத்து குண்டுகளை கொட்டினார்களோ அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கின்றோம். குற்றம் புரிந்தவனே நீதிபதியாக இருந்தால், விசாரணையாளராக இருந்தால் எப்படி நீதி கிடைக்கும்?” – என்றார்.